ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் குடியிருப்பை இடித்து அடுக்குமாடி வணிக வளாகம்; பணிகள் தொடக்க விழா நடந்தது
ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் குடியிருப்பை இடித்து விட்டு அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது.
ஈரோடு,
ஈரோடு காளைமாடு சிலை அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் மாநகராட்சி ஆணையாளர் குடியிருப்பாக இயங்கி வந்தது. ஈரோடு நகராட்சியின் பொன்விழா ஆண்டையொட்டி கடந்த 1935-ம் ஆண்டு இந்த கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 30-11-1935 அன்று அப்போதைய கோவை கலெக்டர் பி.ஜி.ஹோல்ட்ஸ்வொர்த் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. “ஈரோடு முனிசிபாலிட்டி (நகராட்சி) பொன்விழா ரெஸ்ட் ஹவுஸ்” என்ற பெயரில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் 19-10-1937 அன்று அப்போதைய சென்னை கவர்னர் லார்டு எர்ஸ்கின் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.
அப்போதில் இருந்து ஈரோடு நகராட்சி ஆணையாளர்கள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் மாநகராட்சி ஆணையாளர் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகமாக இந்த கட்டிடம் இருந்தது. அப்போது அந்த பகுதியில் பிரசித்தி பெற்ற கட்டிடமாக இருந்ததால் அந்த பகுதி பஸ் நிறுத்தம் ரெஸ்ட் ஹவுஸ் பஸ் நிறுத்தம் என்றே அழைக்கப்பட்டது. பின்னர் காளைமாடு சிலை அமைக்கப்பட்ட பின்னர், அந்த வழக்கம் மாறியது.
மிக உயர்ந்த கட்டிடமாக சற்றும் விரிசல் கூட விழாத ‘ரெஸ்ட் ஹவுஸ்’ கட்டிடம் சில ஆண்டுகளுக்கு முன்புவரை பயன்பாட்டில் இருந்தது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் புதிய குடியிருப்பு கட்டப்பட்ட பிறகு இந்த கட்டிடத்தை யாரும் பயன்படுத்தவில்லை. சுமார் 10 ஆண்டுகளாக மாநகராட்சியில் கழிவுப்பொருட்கள் போடும் பகுதியாக இது மாறியது. உபயோகத்தில் இல்லாத கார், வேன், பயன்படுத்த முடியாத டயர்கள், தெருவிளக்கு உபகரணங்கள் என்று பயன்படாத பொருட்கள் போடும் இடமாக மாறியது. இதனால் ஓடுகள் பெயர்ந்தும், கட்டிட சுவர்களில் ஆலமரம், அரசமரங்கள் வளர்ந்து திகில் பங்களா போன்று மாறியது.
இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இங்கு புதிய அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. ரூ.14 கோடியே 94 லட்சம் செலவில் வாகன நிறுத்தத்துடன் கூடிய 4 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. 62 கடைகள் கட்டப்படுகின்றன.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையாளர் சண்முகவடிவு, முன்னாள் மண்டல தலைவர் ரா.மனோகரன், அ.தி.மு.க. பகுதி செயலாளர் கேசவமூர்த்தி, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி ஆணையாளர் பழைய குடியிருப்பு இடிக்கப்பட்டு புதிய வணிக வளாகம் 18 மாதங்களில் கட்ட கால இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.