கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி ஆட்டோ டிரைவர் சாவு; மற்றொருவரை தேடும் பணி தீவிரம்
கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி ஆட்டோ டிரைவர் இறந்தார். மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
பெருந்துறை,
ஈரோடு பெரியவலசு நால்ரோட்டை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 40). ஆட்டோ டிரைவர். இவர் தன்னுடைய நண்பர்களான சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த தரணிகுமார் (39), ஈரோட்டை சேர்ந்த கலையரசன், பிரகதீஷ்வரன் ஆகியோருடன் ஈரோடு அருகே உள்ள வாய்க்கால்மேடு என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் நேற்று முன்தினம் இரவு குளிக்க சென்றார்.
பின்னர் 4 பேரும் தண்ணீரில் குளித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது குமாரசாமியும், தரணிகுமாரும் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. மேலும் தண்ணீரும் அதிக அளவில் சென்றதால் இருவரையும் இழுத்து சென்றது. அருகே குளித்துக்கொண்டு இருந்த கலையரசனும், பிரகதீஸ்வரனும் அவர்களை காப்பற்ற முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. சில நொடிகளில் இருவரும் தண்ணீரில் மூழ்கிவிட்டார்கள்.
இதுபற்றி உடனே பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள். ஆனால் இரவு நேரம் என்பதால் வாய்க்காலில் இறங்கி தேட முடியவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று காலை பவானியில் இருந்து மீனவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் வாய்க்காலில் இறங்கி தேடினார்கள். சில மணி நேரத்தில் குமாரசாமியின் உடல் மீட்கப்பட்டது. அதன்பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தரணிகுமாரை வாய்க்காலில் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாய்க்காலில் மூழ்கி இறந்த குமாரசாமிக்கு யுவராணி (35) என்ற மனைவியும், தாமரைசெல்வி என்ற மகளும் உள்ளனர்.