நஞ்சில்லா காய்கறிகள்- பழங்களை உற்பத்தி செய்ய வேண்டும்; விவசாயிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்
இயற்கை சாகுபடி முறையை பின்பற்றி நஞ்சில்லா காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு, கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
புதுக்கோட்டை,
தோட்டக்கலை பயிர்களான பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவில் பூச்சித்தாக்குதல் ஏற்படுகிறது. அதனை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயிர்களில் தெளிப்பதால் காய்கறிகளில் நச்சுத்தன்மை காணப்படுகிறது. இதனை தவிர்க்க இயற்கை சாகுபடி முறையை விவசாயிகள் பின்பற்றி நஞ்சில்லா காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்ய வேண்டும்.
தற்போது தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி, மகசூலை அதிகரிப்பதற்காக விவசாயிகள் அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிக பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு காரணமாக காய்கறிகளிலும் நச்சுத்தன்மை அதிகரித்து உள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனரகம் அனைத்து மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது. அதன்படி, இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை சாகுபடி செய்ய விவசாயிகளிடம் பரிந்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது காய்கறி பயிர்களான கத்தரி, வெண்டை, கொத்தவரை, கீரை, புடல், பாகல், தர்பூசணி, வெள்ளரி அதிகமாக பயிரிடப்படுகிறது. மேலும் மா, பலா, வாழை, கொய்யா, முந்திரி போன்ற பயிர்களும் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது காய்கறி பயிர்களில் பூச்சிநோய்கள் தென்படும்போது விவசாயிகளால் அதிக விஷமுள்ள குளோரிபைரிபாஸ், இமிடாகுளோபிரிப், பியூரடான், மோனேகுரோட்டோபாஸ் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் காய்கறி பயிர்களில் நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அவற்றை உண்ணும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படுகிறது. நிலத்தடி நீரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலப்பதால் நீரும் மாசுபடுகிறது. நிலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்படுவதால் நிலத்தின் தரம் குறைந்து பயிர் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதற்கான வழி ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். அதன்படி, விதைநேர்த்தி செய்யப்பட்ட தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். பயிர்சுழற்சி செய்ய வேண்டும். விளக்குப்பொறி அமைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும். மஞ்சள் ஒட்டுப்பசை பொறியை பயன்படுத்தி சாறு உறுஞ்சும் பூச்சிகளை கட்டுபடுத்தலாம்.
உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளான ஒட்டுண்ணிகள், இரைவிழுங்கிகள், இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தி பயிருக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கலாம். இயற்கை மருந்துகளான நொச்சிச்சாறு, வசம்பு சாறு, பூண்டு சாறு, புகையிலை சாறு, வேப்பஎண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி பூச்சிகளை அழிக்கலாம். மேலும், விவசாயிகள் தங்கள் பயிர்களில் பூச்சி, நோய்கள் தாக்கும்போது தங்கள் பகுதிகளில் உள்ள தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களிடம் ஆலோசனைகள் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.