சரத்பவாரின் சொத்து மதிப்பு ரூ.60 லட்சம் அதிகரிப்பு வேட்பு மனுவில் தகவல்
கடந்த 6 ஆண்டுகளில் சரத்பவாரின் சொத்து மதிப்பு ரூ.60 லட்சம் அதிகரித்து இருப்பது, அவர் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தாக்கல் செய்து உள்ள வேட்புமனு மூலம் தெரியவந்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 2-ந் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், நேற்று முன்தினம் மும்பையில் உள்ள விதான் சபாவில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர் வேட்பு மனுவில் அளித்து உள்ள தகவலின்படி கடந்த 6 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.60 லட்சம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
ரூ.1 கோடி கடன்
2014-ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி. தேர்தலின் போது சரத்பவார் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவருக்கு ரூ.20 கோடியே 47 லட்சத்து 99 ஆயிரத்து 970 மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.11 கோடியே 65 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.32 கோடியே 13 லட்சம் சொத்து இருப்பதாக கூறியிருந்தார். இதேபோல கடன் எதுவும் இல்லை என தெரிவித்து இருந்தார்.
தற்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் ரூ.25 கோடியே 21 லட்சத்து 33 ஆயிரத்து 329 மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.7 கோடியே 52 லட்சத்து 33 ஆயிரத்து 941 மதிப்பிலான அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.32 கோடியே 73 லட்சம் இருப்பதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.60 லட்சம் அதிகரித்து உள்ளது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் சரத்பவார் ரூ.1 கோடி கடன் இருப்பதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.