கர்நாடக முதியவர் உயிரிழப்பு கொரோனா வைரசுக்கு இந்தியாவில் முதல் பலி ரத்த பரிசோதனை ஆய்வில் உறுதியானது

கொரோனா வைரசுக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பலியாகி இருப்பது ரத்த பரிசோதனை ஆய்வின் மூலம் உறுதியாகி உள்ளது. இந்தியாவிலேயே கர்நாடக முதியவர் தான் கொரோனாவுக்கு பலியான முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2020-03-12 23:31 GMT
பெங்களூரு, 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 4,500-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது கோரத்தாண்டவத்தை தொடங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கர்நாடகம், மராட்டியம், கேரளா உள்பட பல மாநிலங்களில் கொரோனா வைரசால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் கொரோனா வைரசும் பரவி வருகிறது.

76 வயது முதியவர்

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கலபுரகி(மாவட்டம்) டவுன் பகுதியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து கலபுரகிக்கு திரும்பினார். அப்போது அவருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கருதப்பட்டது.

இதையடுத்து கடந்த 5-ந் தேதி அவர் கலபுரகியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக ஐதராபாத்துக்கு அவருடைய குடும்பத்தினர் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ரத்த பரிசோதனை அறிக்கை

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணம் அடைந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி மந்திரி ஸ்ரீராமுலு கூறுகையில், ‘‘மரணம் அடைந்த முதியவரின் ரத்த மாதிரி ஆய்வுக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பின்புதான் அவர் எப்படி இறந்தார்? என்பதை உறுதியாக கூற முடியும்’’ என்று தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று அந்த முதியவரின் ரத்த பரிசோதனை அறிக்கை கர்நாடக சுகாதாரத்துறைக்கு கிடைத்தது. அதில் அந்த முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதன் காரணமாகவே மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தியாவில் முதல் பலி

இதை கர்நாடக சுகாதாரத்துறையும் உறுதிப்படுத்தியது. இதன்மூலம் கலபுரகி முதியவர் கொரோனா வைரசால் மரணம் அடைந்திருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவிலேயே முதலாவதாக கர்நாடகத்தில் கொரோனா வைரசுக்கு முதியவர் ஒருவர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்