ஆரணி கும்மடம் வீதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணி

ஆரணி கும்மடம் வீதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை அமைக்கும் பணியால் நோயாளிகள், மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

Update: 2020-03-12 23:00 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதியில், ஆரணி கும்மடம் வீதியில் இருந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை 770 மீட்டர் நீளம், 4.5 மீட்டர் அகலத்தில் சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது.

மேலும் புதிய இருளர் காலனியில் 550 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கும் பணி உள்ளிட்டவை ரூ.1 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

ஆமை வேகத்தில்...

கடந்த நவம்பர் மாதம் 25-ந்தேதி தொடங்கிய இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள், ஆசிரியர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் நோயாளிகள், ரே‌‌ஷன் கடைக்கு செல்லும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், சாலையின் நடுவே ஜல்லி கற்கள் மற்றும் எம்சாண்ட் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாலும், சாலையின் நடுவே ஜல்லி கற்களும், எம்சாண்டும் கொட்டி வைத்திருப்பதாலும் போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

எனவே, இந்த பணியை போர்க்கால அடிப்படையில் விரைவாக செய்து முடிக்கவேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட  நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்