நில மோசடி செய்தவர் கைது

திருவள்ளூர் அருகே நில மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-12 22:00 GMT
திருவள்ளூர், 

சென்னை கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், சுதானந்த பாரதி தெருவை சேர்ந்தவர் வாராகி (வயது 44). இவரிடம் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், பண்ணூர் கிராமம் திருப்பந்தியூர் மதுரா, சூசையப்பர் தெருவை சேர்ந்த மார்ட்டின் (55) என்பவர் ரூ.32 லட்சத்தை பெற்றுக் கொண்டார்.

அதற்கு ஈடாக காஞ்சீபுரம் மாவட்டம், எச்சூர் கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 8 சென்ட் நிலத்தின் அசல் ஆவணங்கள் இரண்டையும் வாராகியிடம் கொடுத்துள்ளார். அதற்கு கடந்த 16.11.2015 அன்று ஒரு கடன் பத்திரம் எழுதி மார்ட்டின் கொடுத்துள்ளார்.

பின்னர் மார்ட்டின் தான் எழுதிக்கொடுத்த கடன் பத்திரத்தை மறைத்துவிட்டு, அந்த சொத்தின் அசல் ஆவணங்கள் அனைத்தும் தொலைந்து விட்டதாக மப்பேடு போலீஸ் நிலையத்தில் ஒரு பொய்யான புகார் அளித்து தொலைந்து போனதற்கான சான்றிதழ்களை பெற்றார்.

கைது

அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு மார்ட்டின் தன்னுடைய மகனான அந்தைய மெக்ஸிமஸ் பெயருக்கு சொத்தை தான் செட்டில்மென்ட் செய்து கொடுத்துவிட்டார்.

இதை அறிந்த வாராகி திருவள்ளூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று திருவள்ளூர் அருகே பதுங்கி இருந்த மார்ட்டினை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்