போலீஸ் நிலையம் எதிரே ரோந்து ஜீப் தீப்பிடித்து எரிந்தது

தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே நிறுத்தி இருந்த ரோந்து ஜீப் தீ்ப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-03-12 22:45 GMT
பெரம்பூர், 

சென்னை தண்டையார்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்ற போலீஸ் ஜீப்பை, நேற்று காலை போலீஸ் நிலையம் எதிரே நிறுத்தி வைத்து இருந்தனர்.

காலை 10 மணி அளவில் திடீரென ரோந்து ஜீப் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், போலீஸ் ஜீப்பில் எரிந்த தீயை அணைத்தனர்.

நாசவேலையா?

எனினும் தீ விபத்தில் ஜீப் முற்றிலும் எரிந்து நாசமானது. அருகில் நிறுத்தி இருந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் தீயில் எரிந்து சேதமானது.

போலீஸ் நிலையம் எதிரே மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது. அங்கு இரும்பு கம்பிகளை வெல்டிங் செய்யும்போது அதில் இருந்து பறந்துவந்த தீப்பொறி விழுந்து ஜீப் தீப்பிடித்ததா? அல்லது பேட்டரியில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது மர்மநபர்கள் யாரேனும் ஜீப்புக்கு தீ வைத்து நாசவேலையில் ஈடுபட்டனரா? என பல்வேறு கோணங்களில் தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்