ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பயங்கரம்: ஆட்டோ டிரைவர் படுகொலை -மர்ம கும்பல் வெறிச்செயல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;

Update: 2020-03-11 22:15 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது, கரைவளைந்தான்பட்டி. இந்த கிராமத்தில் வசிக்கும் கருப்பையா என்பவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 19). ஆட்டோ டிரைவர்.

இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கரைவளைந்தான்பட்டி கிராமத்திற்கு செல்ல மீனாட்சிபுரம் செல்லும் பாதையில் உள்ள ஒரு அரிசி ஆலை அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்துள்ளது.

இதனால் சுதாரித்துக் கொண்டு தப்புவதற்குள் அந்த கும்பல் சுற்றி வளைத்து கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.

அங்கு கிருஷ்ணமூர்த்திக்கு சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்து விட்டார்.

இந்த கொலை தொடர்பாக தகவல் அறிந்ததும் கிருஷ்ணன்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் கிருஷ்ணமூர்த்தி உடலில் 16 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொடூர கொலையை அரங்கேற்றிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்