பாரதிதாசன் கல்லூரி மாணவிகளுக்கு மதிய உணவு வழங்க ரூ.50லட்சம் அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு

பாரதிதாசன் கல்லூரி மாணவிகளுக்கு மதிய உணவு வழங்க ரூ.50லட்சம் வழங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Update: 2020-03-11 23:38 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சங்கம் சார்பில் ஏழை எளிய மாணவிகளுக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மதியநேர வகுப்புகளுக்கு வரும் மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா நேற்று மதியம் நடந்தது. விழாவில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.50 லட்சம்

இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் பழைய மாணவிகளுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது குறிப்பிட்ட சில மாணவிகளுக்கு மட்டும் தான் உணவு வழங்கப்படுகிறது. உணவு வழங்குவதில் கட்டுப்பாடு இருக்கக்கூடாது. இந்த கல்லூரியில் ஆதிதிராவிட மாணவிகள் அதிகம் பேர் படிக்கின்றனர். எனவே சிறப்பு கூறு நிதியில் இருந்து மதிய உணவு திட்டத்திற்காக ரூ.50லட்சம் இந்த கல்லூரிக்கு வழங்கப்படும். இதற்காக துறையின் செயலாளர், இயக்குனரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், சங்க தலைவர் ரஜினி சனோலியன், செயலாளர் நோயலின், பொருளாளர் பரிமளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்