ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக முதியவர், கொரோனாவுக்கு பலி? மாநில அரசு விளக்கம்

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் திடீரென்று உயிரிழந்தார். அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானாரா? என கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Update: 2020-03-11 23:29 GMT
ெபங்களூரு, 

சீனாவில் ஆயிரக்கணக்கானோரை உயிர்பலி வாங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ்

இதுவரை 4,500-க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய கொரோனா வைரசால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் மூலமாக இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நுழைந்துவிட்டது. இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 61 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைதொடர்ந்து கொரோனா வைரசை கட்டுப்படுத்த கர்நாடக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி அமெரிக்கா சென்று திரும்பிய பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

இதைதொடர்ந்து கர்நாடகத்தில் கொரோனா வைரசை தடுக்கும் முன்எச்சரிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. அதாவது கொரோனா வைரஸ் குழந்தைகள், பெரியவர்களை அதிகளவில் தாக்குவது தெரியவந்ததால், கடந்த 10-ந்தேதி முதல் மழலையர் வகுப்புகளுக்கு காலவரையற்ற கட்டாய விடுமுறை அறிவித்்தது. அதுபோல் நேற்று முன்தினம் முதல் 5-ம் வகுப்பு வரை அரசு- தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மழலையர் பள்ளிகளும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செயல்படும் பள்ளிகளும் மூடப்பட்டு கிடக்கின்றன.

கொரோனா வைரஸ் பீதியில் பெங்களூருவில் முகக்கவசத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் முகக்கவசத்தின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதை அறிந்த கர்நாடக அரசு, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும், நோய் பாதிக்கப்படாதவர்கள் அணிய தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

4 பேர் பாதிப்பு

இதற்கிடையே கம்ப்யூட்டர் என்ஜினீயரின் மனைவி, குழந்தை, அவரது நண்பர் ஆகிய 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது. இதனால் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் பெங்களூருவில் உள்ள ராஜீவ்காந்தி நெஞ்சக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா வைரசை தடுக்க மாநகராட்சி கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.

கொரோனாவுக்கு முதியவர் சாவு?

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநிலம் கலபுரகியை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அவர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்ததாக கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

கலபுரகி (மாவட்டம்) டவுன் பகுதியை சேர்ந்தவர் 76 வயது முதியவர். அவர் சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டு சில நாட்களுக்கு முன்பு கலபுரகிக்கு வந்தார். அவர் அங்கிருந்து வந்தபோது, உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார். அதன் பிறகு அவருக்கு காய்ச்சல், சளி ஏற்பட்டது.

இதையடுத்து கொரோனா வைரஸ் அறிகுறியுடன் கடந்த 5-ந் தேதி அவர் கலபுரகியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அவரை ஐதராபாத்துக்கு அழைத்து சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடந்த சில நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்தநிலையில் அவர் நேற்று மரணம் அடைந்தார். அவரது ரத்தம், சளி மாதிரிகள் மருத்துவ ஆய்வுக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலபுரகி மாவட்ட கலெக்டர் கூறினார். மேலும் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையை கண்காணித்து வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.

கர்நாடக அரசு விளக்கம்

முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்ததாக வெளியான தகவலை கர்நாடக அரசு மறுத்ததுடன், விளக்கம் அளித்து உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“கலபுரகியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த 76 வயது முதியவர் மரணம் அடைந்துள்ளார். அவரது உடல் அடக்கம் செய்யும் பணிகள் முடிவடையும் வரை கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் அவர் உயிரிழந்தாரா என்பது, ஆய்வறிக்கை வந்த பிறகே தெரியவரும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வதந்திகளை பரப்ப வேண்டாம்

இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, “கலபுரகியில் மரணம் அடைந்த முதியவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது. ஆனால் அவரது ரத்த மாதிரி பெங்களூருவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் முடிவு இன்னும் வரவில்லை. அதனால் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். இத்தகைய வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம்” என்றார்.

மேலும் செய்திகள்