பட்டாபிராமில் தேவாலயத்தில் முதியவர் குத்திக்கொலை வாலிபருக்கு வலைவீச்சு

பட்டாபிராமில் தேவாலயத்தில் முதியவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-03-11 22:30 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் சத்திரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ஈனோஸ் (வயது 62). ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், பட்டாபிராம் வள்ளலார் நகரில் உள்ள சி.பி.எம். பெந்தேகோஸ்தே தேவாலயத்தை சுத்தம் செய்வது, அங்கு வருபவர்களுக்கு ஜெபிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று மாலை ஈனோஸ் தேவாலயத்தில் இருந்தார். அவருடன் வில்சன் மற்றும் சாக்கோ ஆகியோரும் இருந்தனர். அப்போது தேவாலயத்துக்கு வந்த பட்டாபிராம், அம்பேத்கர் நகர், பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த மோசஸ் (27) என்பவர் ஈனோசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஈனோசின் மார்பில் 3 இடங்களில் சரமாரியாக குத்திக்கொலை செய்தார்.

வலைவீச்சு

இதை தடுக்க வந்த வில்சன் மற்றும் சாக்கோ ஆகியோரையும் குத்த முயன்றார். இதனால் அவர்கள் பயந்து ஓடிவிட்டனர். பின்னர் மோசசும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பட்டாபிராம் போலீசார் கொலையான ஈனோஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

தப்பி ஓடிய மோசஸ், போதை மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர். அவர் மீது கொலை, அடிதடி உள்பட பல வழக்குகள் உள்ளன. கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மோசஸ் ஒரு மாதத்துக்கு முன்பு வெளியே வந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மோசசை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்