பொன்னேரி அருகே பழவேற்காடு முகத்துவார கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்
பொன்னேரி அடுத்த பழவேற்காடு முகத்துவார கடற்கரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து கரைஒதுங்கிய நிலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி,
பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் ஏரியும், வங்க கடலும் இணையும் இடம் முகத்துவாரம் பகுதி உள்ளது. இங்குள்ள கடற்கரை பகுதியில் இனப்பெருக்க காலத்தில் கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்லும்.
கடல் நீரை தூய்மைப்படுத்தும் தன்மை கொண்ட இந்த கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை ஆகும். இந்த காலக்கட்டத்தில் ஆமைகள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் கடலுக்குள் சென்றாலும், தான் பிறந்த இடத்திற்கு வந்து முட்டையிடும்.
இந்த நிலையில், கடலில் ஏற்படும் மாசுகளையும், பிளாஸ் டிக் போன்ற பொருட்களையும் கடல் ஆமைகள் உட்கொள்வதால் அவை இறப்பதாக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இறந்து கரை ஒதுங்கின
கடந்த மாதத்தில் பழவேற்காடு முகத்துவார பகுதியில் 20-க்கும் மேற்பட்ட 25 முதல் 50 கிலோ எடையுள்ள கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இதனைத்தொடர்ந்து நேற்று முகத்துவார கடற்கரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இதனால் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள் உடல் சிதைந்து காணப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் மீனவர்களுக்குள் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.