குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திருச்சி முதல் வேதாரண்யம் வரை நடைபயணம் தஞ்சையில், முத்தரசன் பேட்டி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திருச்சி முதல் வேதாரண்யம் வரை நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தஞ்சையில், முத்தரசன் கூறினார்.

Update: 2020-03-12 00:15 GMT
தஞ்சாவூர்,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதை யாரும் தூண்டவில்லை. தன்னெழுச்சியாக நடைபெறுகிறது. ஆனால் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது. தனது நிலையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விடுதலை போராட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தைப்போல தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கணக்கெடுப்புக்கு வரும்போது மக்கள் ஒத்துழைப்பு வழங்க கூடாது. இதை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த மாத இறுதிக்குள் சமூக நல்லிணக்க மாநாடு நடத்தப்படும். விடுதலை போராட்ட காலத்தில் 1930-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருச்சியில் இருந்து வேதாரண்யத்துக்கு உப்பு சத்தியாகிரக யாத்திரை நடைபெற்றது.

நடைபயணம்

அதேபோல் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்தும், இவைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அடுத்த மாதம்(ஏப்ரல்) 13-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விட 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது. கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேர இப்போதே தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும். கடந்த காலத்தை போல் அணை திறக்கப்படும் நேரத்தில் தூர்வாரும் பணியை தொடங்கி, தண்ணீர் வந்தவுடன் முடித்து விட்டதாக முறைகேட்டில் ஈடுபடக்கூடாது.

அடக்கு முறை

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி மறுப்பது தவறானது. போலீசாரை கொண்டு மக்களை அடக்க நினைக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக விழிப்புணர்வு கூட்டம் நடத்தினால் கூட வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதுபோன்ற அடக்கு முறையை தமிழக அரசு கைவிட வேண்டும்.

மதக்கலவரம் மூலம் அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சி செய்கிறது. குஜராத்தில் எப்படி மதக்கலவரத்தை தூண்டி ஆட்சிக்கு வந்தார்களோ அதேபோல் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் மதக்கலவரத்தை தூண்ட பா.ஜ.க. முயலுகிறது. இதை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.

சட்டசபையில் தீர்மானம்

மதவன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் எச்.ராஜா, பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பீகார், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களை போல் தமிழகத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழகஅரசு கடுமையான பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். வருமுன் காப்பது அரசுக்கு அழகு. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மனித உயிரை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட செயலாளர் பாரதி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்