வேடசந்தூர் பேரூராட்சி குப்பைக்கிடங்கில் தீ

வேடசந்தூர் பேரூராட்சி குப்பைக்கிடங்கில் தீப்பற்றி எரிந்தது.

Update: 2020-03-11 22:00 GMT
வேடசந்தூர்,

வேடசந்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் வேடசந்தூரில் மாரம்பாடி சாலையில் உள்ள பேரூராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன. தற்போது குப்பைக்கிடங்கு நிரம்பி வழிகிறது. இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் குப்பைக்கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் குப்பையில் மள, மளவென தீப்பற்றி எரிந்தது. சிறிதுநேரத்தில் புகைமூட்டம் ஏற்பட்டது.

இதன்காரணமாக குப்பை கிடங்கு அருகே உள்ள காமராஜர் நகர், வசந்த நகர், பாத்திமா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர். இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை அணைக்க செல்லவில்லை என்று கூறப்படுகிறது. 4 மணி நேரம் கழித்து தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணதை்தனர்.

இதுகுறித்து காமராஜர்நகரை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, வேடசந்தூர் பேரூராட்சி குப்பைக்கிடங்கில் குப்பைகள் தீப்பிடித்து எரிவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அருகே உள்ள குடியிருப்புகளில் வசிக்கிற பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். வழக்கம் போல் நேற்று குப்பைக்கிடங்கில் தீப்பிடித்து எரிந்தது. அதனை அணைப்பதற்கு வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் தீயை அணைக்க தண்ணீர் இல்லை என்று அவர்கள் நீண்டநேரமாக வரவில்லை. இதனால் பலமணி நேரம் புகை மண்டலத்தில் சிக்கி அவதிப்பட்டோம் என்றனர்.

மேலும் செய்திகள்