போடி அருகே தீப்பற்றி எரிந்த மலைப்பகுதியில் தீயணைப்புத்துறை துணை இயக்குனர் ஆய்வு

போடி அருகே தீப்பற்றி எரிந்த மலைப்பகுதியில் தீயணைப்புத்துறை தென்மண்டல துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.;

Update: 2020-03-11 22:00 GMT
தேனி,

தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதி மற்றும் போடி அருகே மரக்காமலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்தது. நேற்று முன்தினம் இரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வனத்துறையினர் முயன்றும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. வீரப்பஅய்யனார் கோவில் மலைப்பகுதியில் நள்ளிரவில் தீ கட்டுக்குள் வந்தது. மரக்காமலை பகுதியில் தீ கட்டுக்குள் வந்த போதிலும், நேற்று அதிகாலையில் ஆங்காங்கே புகை வெளியேறி கொண்டே இருந்தது.

இதையடுத்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) மணிகண்டன் தலைமையில் தேனி, போடி, கம்பம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தீத்தடுப்பு தன்னார்வலர்கள் சுமார் 100 பேர் மரக்காமலை பகுதிக்கு நேற்று சென்றனர். அவர்கள் மலையடிவாரத்தில் இருந்து மலை உச்சிப்பகுதிக்கு நடந்து சென்றனர்.

அந்த மலைப்பகுதியில் ‘லெமன் கிராஸ்' எனப்படும் போதப்புல் அதிக அளவில் வளர்ந்து இருந்தன. அவற்றில் பற்றிய தீ மளமளவென மலை உச்சி வரை பிடித்து, அருகில் இருந்த மலையிலும் பற்றி எரிந்து சாம்பலாக காட்சி அளித்தது. ஆங்காங்கே சிறிய அளவில் எரிந்து கொண்டு இருந்த தீயையும் தீயணைப்பு படையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து அணைத்தனர்.

இதற்கிடையே தீயணைப்புத்துறை தென்மண்டல துணை இயக்குனர் சரவணக்குமார் தேனி வந்தார். அவரும், மரக்காமலையில் தன்னார்வலர்களுடன் இணைந்து தீத்தடுப்பு பணிகளில் ஈடுபட்டார். பின்னர், அவர் மலை உச்சி வரை சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தீத்தடுப்பு பணிகள் குறித்து தன்னார்வலர்களுக்கு அவர் பயிற்சி அளித்தார்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து துணை இயக்குனர் சரவணக்குமாரிடம் கேட்டபோது, ‘இந்த மலைப்பகுதியில் இயற்கையாக காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புகள் மிகக்குறைவு. மனித தவறுகளால் தீவிபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. மலைப்பகுதியில் தீ வைப்பதால் வன விலங்குகள் இடம் பெயரும். இது மலையடிவார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மலையடிவார கிராம மக்கள், விவசாயிகள் ஒத்துழைப்பு இருந்தால் தான் வனப்பகுதிகளில் தீவிபத்து ஏற்படாமல் தடுக்க முடியும்' என்றார்.

தீயணைப்பு பணிகள் முடிந்து தீயணைப்பு வீரர்களும், தன்னார்வலர்களும் அணைக்கரைப்பட்டி வழியாக திரும்பி வந்து கொண்டு இருந்தனர். இதில், தன்னார்வலர்கள் வந்த ஒரு வேன் எதிரே வந்த பொக்லைன் எந்திரத்துக்கு வழிவிட முயன்ற போது, சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால், வேன் சாயும் நிலை ஏற்பட்டது. உடனே பொக்லைன் எந்திரம் மூலம் அந்த வேனை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது பயன் அளிக்காததால், டிராக்டரில் கயிறு கட்டி அந்த வேன் பத்திரமாக மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்