தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் மருத்துவக் குழுவினர் ஆய்வு
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஆய்வகத்தை சென்னை மருத்துவக் குழுவினர் ஆய்வு நடத்தினர்.;
ஆண்டிப்பட்டி,
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னை கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் ரத்தபரிசோதனை கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உடனடியாக ஆய்வகம் அமைக்கப்பட்டது.
மதுரை, சேலம், திருவாரூர், விழுப்புரம், நெல்லை, கோவை, சென்னை ஆகிய 7 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் தேனி, சென்னை ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஆய்வகம், சிகிச்சைக்கான சிறப்பு வார்டு ஆகியவற்றில் சென்னை மருத்துவக்கல்வி துணை இயக்குனர் டாக்டர் ஜெகநாதன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஆய்வு நடத்தினர்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, சர்வதேச தரத்தில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் ரத்தமாதிரிகளை சோதனை செய்து 3 மணிநேரத்தில் முடிவு தெரிந்துவிடும். கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே மக்கள் வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என்றார்.ஆய்வின்போது, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ராஜேந்திரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன் மற்றும் நுண்ணுயிரியல் துறை தலைவர், பேராசிரியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.