கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சையளிக்க 3 டாக்டர்கள்; 14 படுக்கைகளுடன் தனி வார்டு

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 3 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 14 படுக்கைகளுடன் தனி வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-03-11 22:15 GMT
திருப்பத்தூர்,

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வார்டு 14 படுக்கைகளுடன், பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர், பல்டிபாரா மீட்டர், வென்டிலேட்டர் வசதி, முகக் கவசங்கள், டாக்டர்கள், நர்சுகள் பயன்படுத்தும் பிரத்யேக ஆடைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் கொரோனாவைரஸ் பாதித்த நோயாளிகளை கவனிக்க டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை 24 மணி நேரமும் தனியறையில் தங்கி கவனிக்க நர்சுகளுக்கு பிரத்யேக அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் திலீபன் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. சீனாவில் இருந்து வந்த 9 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த 23 பேர் தனிமை படுத்தப்பட்டு, அங்கேயே தொடர் கண்காணிப்பில் உள்ளனர். கொேரானா வைரஸ் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க தனியறை, அவர்களை வெளியே கொண்டு செல்ல தனி வழி, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிரத்யேக உடை (ஒருமுறை பயன்படுத்திவிட்டு அழிக்கப்படும்) உள்ளது.

டாக்டர்கள் ஜனனி, பிரபாகரன், வெங்கடேசன் ஆகிய 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். முகக் கவசம் தேவையான அளவு உள்ளது. சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் கையிருப்பு உள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்