‘கோதாவரி தண்ணீரை கொண்டு வர தமிழகத்துக்கு பக்கபலமாக இருக்கிறேன்’ - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

கோதாவரி தண்ணீரை கொண்டு வர தமிழகத்துக்கு பக்கபலமாக இருக்கிறேன் என்று தேனி நாடார் சரசுவதி பள்ளி புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Update: 2020-03-10 22:30 GMT
தேனி,

தேனி அருகே வடபதுப்பட்டியில், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் சரசுவதி பப்ளிக் பள்ளி, நாடார் சரசுவதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு உறவின்முறை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜமோகன் வரவேற்றார். விழாவில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் கட்டிடங்களுக்கான கல்வெட்டுகளை திறந்து வைத்து குத்துவிளக்கை அவர் ஏற்றி வைத்தார்.

விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களில் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உறவின்முறை கல்வி நிறுவனங்கள் ஏழை மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், பாராமெடிக்கல் கல்லூரி தொடங்க வேண்டும் என்றும் எனது ஆசையை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவ, மாணவிகள் துணிச்சலாக, மகிழ்ச்சியாக, வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு வாழுங்கள். நேர்மையாக வாழும் போது வாய்ப்புகள் நம்மை தானாகவே தேடி வரும். பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று யாரும் நினைக்க வேண்டாம். நல்லவர்களும், வல்லவர்களும் அரசியலுக்கு வந்தால் தான் காமராஜரைப் போன்று, பிரதமர் மோடியை போன்று தூய்மையான ஆட்சியை கொடுக்க முடியும்.

தமிழகத்துக்கு கோதாவரியில் இருந்து குடிநீர் வர இருக்கிறது. அதற்கான முயற்சியை தமிழக முதல்-அமைச்சரும், தெலுங்கானா முதல்-அமைச்சரும் எடுத்து வருகிறார்கள். அதற்கு பக்கபலமாக நான் இருக்கிறேன். தெலுங்கானா கவர்னராக மட்டுமல்ல, தமிழகத்தின் பெருமைமிகு மகளாக, தமிழகத்துக்கு என்னென்ன வகையில் பலன் கிடைக்க வேண்டுமோ அதில் ஒரு எளிய தொண்டனாக நான் இருப்பேன். தமிழகத்துக்கு தண்ணீர் வருவதற்கு அத்தனை முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்கும் போது அதற்கு பக்கபலமாக இருந்து கொண்டு இருக்கிறேன்.

தமிழக மக்களின் தேவையை தெலுங்கானா முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறி, தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். என் தந்தையை எதிர்த்து ஒரு இயக்கத்தில் சேர்ந்து, இன்றைக்கு அப்பாவே பாராட்டும் விதத்தில் முன்னேறி இருக்கிறேன் என்றால், அதற்கு நேர்மையான செயலும், இறைவனின் அருளும், ஆண்டு கொண்டிருப்பவர்களின் அருளும் தான் காரணம்.

எனவே மாணவ, மாணவிகள் நேர்மையாக இருங்கள். துணிச்சலோடு வாழ்வை எதிர்கொள்ளுங்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளை தகர்த்து சாதனையாளர்களாக வாழுங்கள். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு வந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு உறவின்முறை கல்வி நிறுவனங்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவிகள் கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய நடனம் ஆடியும், சிலம்பாட்டம் ஆடியும் வரவேற்றனர். மேலும் பல வண்ண உடைகளில் மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று நடனம் ஆடியும், மலர் தூவியும் வரவேற்றனர்.

விழாவில் பா.ஜ.க. மாநில செயலாளர் கரு.நாகராஜன், உறவின்முறை நிர்வாகிகள், உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரி செயலாளர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உறவின்முறை பொருளாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்