2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை கணவர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்
ராமநாதபுரம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள எஸ்.கே.ஊருணியை சேர்ந்தவர் ராஜாக்கிளி. இவரது மகள் ரேகா(வயது 23). இவருக்கும், கீழநாகாச்சி பகுதியை சேர்ந்த சந்திரதேவர்(57) மகன் டிரைவர் பழனி(34) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வைஷ்ணவி(3), வைசாலி(2) என்ற பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு உச்சிப்புளி பகுதியில் தனது 2 பெண் குழந்தைகளுடன் ரேகா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் ரேகா மற்றும் 2 குழந்தைகள் இறப்பிற்கு காரணமான கணவர் பழனி, அவரது தந்தை சந்திரதேவர், தாயார் ஆறுமுகம் அம்மாள்(52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கினை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருந்த பழனி, சந்திரதேவர், ஆறுமுகம் அம்மாள் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மனோரஞ்சிதம் ஆஜரானார்.