வேலூரில், பிளாஸ்டிக் கவர் தயாரித்த தொழிற்சாலைக்கு ‘சீல்’ - வருவாய்துறையினர் நடவடிக்கை

வேலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் தயாரித்த தொழிற்சாலைக்கு வருவாய்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.;

Update: 2020-03-10 22:30 GMT
வேலூர், 

வேலூர் அல்லாபுரம் கிராமத்தில் பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் தயாரிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு தெரிவித்தனர்.

கலெக்டர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதவள்ளி, வேலூர் தாசில்தார் சரவணமுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிபொறியாளர் கலைசெல்வி, கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் மற்றும் அலுவலர்கள் அந்த தொழிற்சாலைக்கு நேற்று சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் அந்த தொழிற்சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் தயாரிப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், ரூ.2 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் மூலப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் எந்திரங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டன. அதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து அந்த தொழிற்சாலைக்கு தாசில்தார் சரவணமுத்து தலைமையில் வருவாய்துறை அலுவலர்கள் ‘சீல்’ வைத்தனர். தொழிற்சாலை உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும், பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் மூலப்பொருட்கள் தார்சாலை அமைக்கும் பணி அல்லது சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்