கொரோனா வைரஸ் எதிரொலி: மாநகர பஸ்களை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

கொரோனா வைரஸ் எதிரொலியாக மாநகர பஸ்களை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2020-03-10 23:30 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசின் சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.

அப்போது முதல்-அமைச்சர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறும், பயணிகள் அதிகம் பயணம் செய்யும் பஸ்களை தினமும் முறையாக பராமரித்து, சுத்தம் செய்யுமாறும் உத்தரவிட்டார்.

கிருமிநாசினி மூலம் சுத்தம்

அதன் அடிப்படையில் பஸ்களை நல்ல முறையில் சுத்தம் செய்யுமாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவுறுத்தியிருந்தார். சென்னையில் மாநகர் போக்குவரத்துக்கழகம் சார்பில் தினமும் 3 ஆயிரத்து 400 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 30 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர்.

பயணிகளின் நலனை பாதுகாத்திடும் வகையிலும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டும் சுகாதாரத்துறையின் ஆலோசனையின்படி மாநகர பஸ்கள், அந்தந்த பணிமனைகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கிருமிநாசினி மூலம் தீவிரமாக சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

பஸ்களை சுகாதாரமான முறையில் சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்