அம்பத்தூர் அருகே பரிதாபம் கழுத்தில் கயிறு இறுக்கி மாணவர் சாவு

அம்பத்தூர் அருகே வீட்டின் மொட்டை மாடியில் கழுத்தில் கயிறு இறுக்கிய நிலையில் 10-ம் வகுப்பு மாணவர் பிணமாக கிடந்தார்.

Update: 2020-03-10 23:00 GMT
திரு.வி.க.நகர், 

சென்னை அம்பத்தூர் அடுத்த புதூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் லிங்கம். இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவரது மகன் தர்ஷன் (வயது 14). சூரப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த தர்ஷன் கழுத்தில் கயிறு இறுக்கிய நிலையில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தர்ஷன் மயங்கிக்கிடப்பது குறித்து அவரது தந்தை லிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து, அவர் ஓடி வந்து மகன் தர்ஷனை மீட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் தர்ஷன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில், மொட்டை மாடியில் தர்ஷன் துணி காயப்போட சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கொடிக்கயிறு கழுத்தில் இறுக்கி இறந்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்