கொழும்பு, மலேசியாவில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் தங்கம் பிடிபட்டது ரூ.4 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளும் சிக்கின

கொழும்பு, மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.64 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் சிகரெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2020-03-10 22:30 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

அப்போது கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த முகமது இப்ராகிம் (வயது 43), நிலுகா சஞ்சிவினி (41), தீபிகா சந்தமல்லி (34) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது 3 பேரின் உடமைகளை சோதனை செய்ததில் எதுவுமில்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடம் இருந்து ரூ.59 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 320 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்து வந்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ரபீக் (47) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர்.

சிகரெட்டுகள் பறிமுதல்

அவர், முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தபோது, கட்டுகட்டாக வெளிநாட்டு சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 94 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகளை கைப்பற்றினார்கள்.

4 பேரிடம் இருந்து ரூ.59 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 320 கிராம் தங்கத்தையும் ரூ.3 லட்சத்து 94 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, அவர்களிடம் தங்கம் மற்றும் சிகரெட்டுகளை யாருக்காக கடத்தி வந்தனர்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்