ரூ.6 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக திறக்கப்படாத ரே‌‌ஷன் கடை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை

தர்காஸ் கிராமத்தில் ரூ.6 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரே‌‌ஷன் கடை 5 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. உடனடியாக ரே‌‌ஷன் கடையை திறக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-03-10 22:45 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் தர்காஸ் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கண்ணிவாக்கம் கிராமத்துக்கு சென்று ரே‌‌ஷன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்த கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தர்காஸ் கிராமத்தில் கடந்த 2013-14-ம் ஆண்டு கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்தில் புதிய ரே‌‌ஷன் கடை கட்டப்பட்டது.

கட்டி 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரே‌‌ஷன் கடை திறக்கப்படவில்லை. இதனால் ரே‌‌ஷன் கடை கட்டிடம் மிகவும் பழுதடைந்து வருகிறது. ரே‌‌ஷன் கடையை சுற்றிலும் முள் செடிகள் புதர் மண்டிக்கிடக்கிறது.

தற்போது ரே‌‌ஷன் கடை அசுத்தமான நிலையில் காணப்படுகிறது. மக்கள் வரி பணத்தில் கட்டிய ரே‌‌ஷன் கடை இன்னும் திறக்கப்படாமல் இருப்பதும், இதை பற்றி பல முறை புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதும் மிகவும் வேதனையாக இருப்பதாக தர்காஸ் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் புதிதாக ரே‌‌ஷன் கடை கட்டிடம் இருந்தும் அதனை திறக்காமல் இருப்பதால் நாங்கள் ஒவ்வொரு மாதமும் கண்ணிவாக்கம் கிராமத்துக்கு சென்று ரே‌‌ஷன் பொருட்களை வாங்கி வருகிறோம். இதனால் எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பிரச்சினையில் தலையிட்டு புதியதாக கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ள தர்காஸ் ரே‌‌ஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்