வடமாநிலத்தவர் கடைகளுக்கு பூட்டு; ஈரோட்டில் பரபரப்பு
ஈரோட்டில் வட மாநிலத்தவர் கடைகளுக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாநகர் பகுதியில் வட மாநிலத்தவர் நடத்தும் கடைகள் ஏராளமாக உள்ளன. ஜவுளி, பிளாஸ்டிக், ஸ்டேசனரீஸ், விளையாட்டு உபகரண கடைகள் என அனைத்து விதமான வியாபாரத்திலும் வடமாநில வியாபாரிகள் ஈடுபட்டு உள்ளனர். குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே ஈரோடு வந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த சிலர் டீக்கடைகள் வைத்தும், வட மாநில மற்றும் தமிழர் கடைகளில் கூலி வேலையிலும் இருக்கிறார்கள்.
இந்தநிலையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள வடமாநிலத்தவர் நடத்தும் ஓரிரு கடைகளின் ஷட்டர் கதவில் நேற்றுக்காலை பிளக்ஸ் பேனர் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வெளிமாநில மார்வாடிகளின் வணிக நிறுவனங்களை பூட்டுவோம். தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்...
தமிழக அரசே, தமிழக அரசே வெளியேற்று வெளியேற்று வந்து குவியும் வடஇந்தியர்களை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்று... மார்வாடியே வெளியேறு வெளியேற மறுத்தால் புரட்சி வெடிக்கும் கிளர்ச்சி வெடிக்கும்... ஓடிப்போ... ஓடிப்போ... மார்வாடி கூட்டமே ஓடிப்போ... என்ற வாசகத்துடன் தமிழ்தேசிய கட்சி-தமிழர்நாடு என்று அச்சடிக்கப்பட்டு இருந்தது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படத்துடன் கட்சி தலைவர் தமிழ்நேசன் மற்றும் நிர்வாகிகள் படமும் அச்சிடப்பட்டு இருந்தது.
நேற்று காலையில் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது பிளக்ஸ் பேனர் ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதில் தமிழில் எழுதப்பட்டு இருந்ததால் என்ன என்று புரியாமல் அவற்றை கிழித்து எறிந்து விட்டு கடையை திறக்க முயன்றனர். அப்போது கடையில் புதிதாக பூட்டுபோடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அக்கம்பக்கத்தில் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொள்ளையர்கள் யாராவது கடைக்குள் புகுந்து விட்டார்களோ என்று நினைத்து அவசரம் அவசரமாக பூட்டை அவர்களே உடைத்து கடையை திறந்தனர். கடைகளுக்குள் இருந்த பொருட்கள் அப்படியே இருந்தன. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், அங்கு கிடந்த கிழிந்துபோன பிளக்ஸ் பேனர்களையும் எடுத்து பார்த்து, விவரத்தை கடை உரிமையாளர்களிடம் கூறினார்கள். அதன்பிறகே வடமாநிலத்தவர்களாகிய அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூட்டு போடும் போராட்டம் நடந்து இருப்பது அவர்களுக்கே தெரியவந்தது.
கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் என்று பிளக்ஸ் பேனர் பதாகையில் இருந்தாலும், யார் யார் வந்து இந்த செயலை செய்தது என்று தெரியவில்லை. எனவே கடைவீதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் போலீசார் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும், கடையில் கட்டப்பட்டு இருந்த பதாகையில் சென்னை, ஈரோடு, மதுரை, நெல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே ஈரோடு தவிர மற்றபகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு முல்லை பெரியாறு பிரச்சினையின்போது ஈரோட்டில் உள்ள கேரளாவைச்சேர்ந்தவர்கள் நடத்தும் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு பிறகு வடமாநிலத்தவர் கடைகளை குறிவைத்து நடத்தப்பட்டு இருக்கும் போராட்டம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த போராட்டம் குறித்து தமிழ் தேசிய கட்சி தலைவர் தமிழ்நேசன் கூறியதாவது:-
தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 1 லட்சம் முதல் 1½ லட்சம் பேர் வருகிறார்கள். அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. கூலி வேலைக்களுக்கு செல்வதை தவிர, சாலையோர கடைகள் அதிக அளவில் போட்டு இருக்கிறார்கள். பீடா கடை, பானி பூரி கடை என்று சாலையோர கடைகள் போடுகிறார்கள். இதனால் தமிழர்களின் வியாபார வாய்ப்பு பெருமளவு பாதிக்கிறது. பொம்மை கடை, குளிர்பானக்கடை என்று நடத்துபவர்கள் ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் பெரிய வணிகங்கள் அனைத்தும் மார்வாடி உள்ளிட்ட வட மாநிலத்தவர்களின் கைகளுக்கு போய்விட்டது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிப்பு, தமிழக வர்த்தகர்களுக்கு பொருளாதா இழப்பு ஏற்பட்டு வருகிறது. அனைத்து தொழில்களும் வடமாநிலத்தவர், மலையாளிகள், கன்னடர்கள் வசம் சென்ற பிறகு தமிழக இளைஞர்களுக்கு டாஸ்மாக் மதுக்கடை மட்டுமே மிச்சமுள்ளது. எனவே இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போராட்டத்தை ஒரு அடையாளமாக செய்து இருக்கிறோம்.
உடனடியாக தமிழகத்தில் குடியிருக்கும் வடமாநிலத்தவர் குறித்து கணக்கெடுக்கப்பட வேண்டும். போலீசார் தமிழர்களை கண்காணிப்பதை விடுத்து, குற்றச்செயல்களில் ஈடுபடும் வடமாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டும். தமிழக பொருளாதாரம், வேலைவாய்ப்பினை பாதுகாக்க வடமாநிலத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.