பெரம்பலூரில் துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின்மோட்டார் இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-03-10 23:30 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்துடன் செயல்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின்மோட்டார் இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்கரபாணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் சதாசிவம், மாவட்ட செயலாளர் சீவகன், மத்திய செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியங்களில் ஊதிய நிர்ணயம் செய்து நிலுவைத்தொகையை வழங்குவதுடன், தொடர்ந்து ஊதியம் வழங்க வேண்டும். நடப்பு 2020-ம் ஆண்டுக்கு அரசு அறிவித்த பொங்கல் போனஸ் ஆயிரம் ரூபாயை உடனே வழங்க வேண்டும்.

சீருடை வழங்கவேண்டும்

ஒவ்வொரு மாத ஊதியத்தையும் முதல் தேதியிலேயே வழங்க வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு முதல் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்ததற்கு கூலித்தொகையை உடனே வழங்குவதுடன் தொடர்ந்து வழங்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு அறிவித்த அகவிலைப்படி கடந்த ஜனவரி மாதம் 2019-ல் இருந்து நிலுவையில் உள்ளது. அதனை உடனே வழங்குவதுடன், தொடர்ந்து இனி மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் அடையாள அட்டையும், உரிய காலத்தில் சீருடையும் வழங்கவேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னபிள்ளை, பொருளாளர் நாகராஜன், ஆலோசகர் அன்பரகன் மற்றும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்