திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் தரிசனம்
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவிலில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏர்வாடி,
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவிலில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
அழகிய நம்பிராயர்
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம் நடைபெறும். விழா தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று உத்திர நட்சத்திரத்தில் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
14–ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணியில் இருந்து 8 மணிக்குள் திருத்தேர் முன்பு கால் நாட்டு நடக்கிறது. இரவு 8 மணிக்கு 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருவர். 15–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மேலரதவீதியில் மகேந்திரகிரி மலையை நோக்கி தேவமகரிஷிகளுக்கு 5 நம்பி சுவாமிகளும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
19–ந் தேதி தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 19–ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. 20–ந் தேதி மாலை 5 மணிக்கு நம்பியாற்றில் தீர்த்தவாரி, இரவில் வைஷ்ணவர்களுக்கு விடை சாதித்தல் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை ஜீயர் மடத்தின் பவர் ஏஜெண்டு சிவசங்கரன் தலைமையில் ஜீயர் மட ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.