நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி பேட்டி

நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறினார்.

Update: 2020-03-10 23:30 GMT
நெல்லை, 

நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறினார்.

கருத்து கேட்பு கூட்டம் 

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டு மறுவரையறை பணிகள் தொடர்பாக, கலெக்டர், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில தேர்தல் ஆணையரும், வார்டு மறுவரையறை ஆணையருமான பழனிசாமி தலைமை தாங்கினார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தேர்தல் ஆணைய உறுப்பினர் சுப்பிரமணியன், பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு 

நெல்லை மாநகராட்சி வார்டுகள் பிரிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு குழப்பம் இருக்கிறது என்று பலர் புகார் தெரிவித்தனர். மேலப்பாளையம் பகுதியில் வார்டு மறுவரையறைக்கு முன்பு 10 வார்டுகள் செயல்பட்டு வந்தது. தற்போது வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்த பின்னர் வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்தாமல் 8–ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் முன்பு ஒரே வார்டுக்குள் அமைந்திருந்தது. ஆனால், தற்போது 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. திம்மராஜபுரம் பகுதி 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாளையங்கோட்டை மண்டலத்தில் இருந்தது. தற்போது அதிக தொலைவில் உள்ள தச்சநல்லூர் மண்டலத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் கூறி கோரிக்கை மனு கொடுத்தனர்.

விரைவில் தேர்தல் 

கூட்டத்தில் ஆணையர் பழனிசாமி பேசியதாவது;–

மக்கள் எளிமையாக அன்றாட பணிகளை மேற்கொள்ளவும், உள்ளாட்சி பிரதிநிதிகளை எளிதில் அணுகி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் வார்டுகள் மறுவரையறை செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். அப்போது மனு அளித்தவர்களை வரவழைத்து நேரடியாக கருத்து கேட்கப்படும். வாக்குச்சாவடிகள் தொடர்பாக தனியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, அந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், ‘‘தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். வார்டு மறுவரையறை பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு தேர்தல் நடத்தப்படும்“ என்றார்.

கூட்டத்தில், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், முதன்மை தேர்தல் அலுவலர் (ஊரகம்) ஆனந்தராஜ், (நகர்ப்புறம்) சரவணன், தேர்தல் கண்காணிப்பாளர் பூபதி, தேர்தல் பிரிவு அலுவலர்கள் ராம்லால், திராவிடமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குற்றாலத்தில்... 

இதையடுத்து குற்றாலத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திலும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கலந்து கொண்டார். தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் முன்னிலை வகித்தார். இதில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வார்டு மறுவரையறை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். சில பகுதியில் ஒருசிலருக்கு சாதகமாக வார்டுகள் பிரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்கள். அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்