வக்கீல் படுகொலை வழக்கில், கூலிப்படையினர் உள்பட 7 பேர் கைது - முன்விரோதத்தால் கொலை செய்ததாக வாக்குமூலம்
வக்கீல் படுகொலை வழக்கில் கூலிப்படையினர் உள்பட 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். நிலப்பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 42). வக்கீல். இவர் கடந்த 6-ந் தேதி உத்தமபாளையத்தை அடுத்த அனுமந்தன்பட்டியில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு, போடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சம்பவத்தன்று ரஞ்சித்குமார் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது கார் ஒன்று மோதியது தெரியவந்தது. அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது காரில் வந்த கும்பல் அவரை வெட்டி கொலை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். அதில் கார் டிரைவர் செல்வம் என்ற சூப்செல்வத்தை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கொலை சம்பவம் தொடர்பாக கூடலூரை சேர்ந்த வக்கீல் ஜெயபிரபு (35), வக்கீல் மதன் (34), போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (26), கம்பத்தை சேர்ந்த ஆனந்தன் (21), மதுரையை சேர்ந்த சஞ்சய்குமார் (23), ராஜா (21), வேல்முருகன் (21), ஆகிய 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கார் மற்றும் அரிவாள், பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். அதில் வக்கீல் ரஞ்சித்குமார் குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜகாந்தம் என்பவரிடம் தென்னந்தோப்பை வாங்கியுள்ளார். ராஜகாந்தம் மகன் விஜயனிடம் இருந்த மற்றொரு தென்னந்தோப்பை வக்கீல் ஜெயபிரபு வாங்கி இருக்கிறார். இதனால் ஜெயபிரபு, ரஞ்சித்குமார் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் மோதியதில் ஜெயபிரபுவுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதில் ஆத்திரமடைந்த ஜெயபிரபு மற்றும் அவருடைய தரப்பினர், கூலிப்படையை சேர்ந்த சஞ்சய்குமார், ராஜா, வேல்முருகன் ஆகியோருடன் சேர்ந்து வக்கீல் ரஞ்சித்குமாரை வெட்டி படுகொலை செய்தனர்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.