தமிழ்நாடு சுற்றுலா பொருட்காட்சி நிறைவு: 9 லட்சத்து 83 ஆயிரம் பேர் வருகை அரசுக்கு ரூ.6.38 கோடி வருவாய்
சென்னை தீவுத்திடலில் நடந்த 46-வது தமிழ்நாடு சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நிறைவு பெற்றது.
சென்னை,
சென்னை தீவுத்திடலில் 46-வது தமிழ்நாடு சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை கடந்த ஆண்டு டிசம்பர் 22-ந்தேதி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் 28 மாநில அரசுத்துறைகள், 15 மாநில பொதுத்துறை நிறுவனங்கள், 1 மத்திய அரசு நிறுவனம், 3 பிற மாநில அரசு நிறுவனங்கள், அரிமா சங்கம், தமிழ்நாடு சட்ட உதவி மையம் மற்றும் 110 தனியார் அரங்குகள் இடம்பெற்றன. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலாசார கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றன. அந்தவகையில் 2019-20-ம் ஆண்டில் இதுவரை பொருட்காட்சிக்கு 9.83 லட்சம் பேர் வந்துள்ளனர். இதன்மூலம் ரூ.6 கோடியே 38 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளை காட்டிலும் அதிகமாகும்.
இந்த பொருட்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று சிறந்த அரங்குகளுக்கு பரிசு வழங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பா.பென்ஜமின், அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, சுற்றுலா கமிஷனர் மற்றும் மேலாண்மை இயக்குனர் த.பொ.ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.