துபாயில் இருந்து விமானத்தில் வந்தவர் கொரோனா வைரஸ் அறிகுறியால் சிகிச்சை பெற்றவர் தப்பி ஓட்டம் வீட்டில் இருந்தவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த மருத்துக்குழுவினர்
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் வந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பி ஓடிவிட்டார். வீட்டில் இருந்த அவரை மருத்துவக்குழுவினர் மீட்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
மங்களூரு,
சீனாவை உலுக்கி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரசால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரசால் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் தங்கி இருந்து பணியாற்றி வந்த தெலுங்கானாவை சோ்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கா்நாடக மக்கள் கொரோனா வைரஸ் பீதியில் இருந்து வருகின்றனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. மேலும் விமான நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
துபாய் விமானம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானம் மூலம் பயணிகள் வந்தனர். அவர்கள் அனைவரையும் சோதனையிட்டதில், ஒரு பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதை விமான நிலைய மருத்துவக்குழுவினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து அவர் மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் அந்த நபரின் ரத்த மாதிரியும் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
ஆஸ்பத்திரியில் இருந்து ஓட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த நபர் தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்வதாக கூறினார். ஆனால் இதனை ஏற்க டாக்டர்கள் மறுத்து விட்டனர். இதனால் அந்த நபர் இரவில் யாருக்கும் தெரியாமல் ஆஸ்பத்திரியில் இருந்து ஓட்டம் பிடித்தார்.
இதுகுறித்து வென்லாக் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், பாண்டேஸ்வர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்த போது அந்த நபர் பாண்டேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஆனால் அவரது பெயர், விவரங்கள் பற்றி தகவல்கள் வெளியாகவில்லை.
இதையடுத்து அந்த நபரை தேடி டாக்டர்களும், போலீசாரும் பாண்டேஸ்வர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்றனர்.
மீண்டும் ஆஸ்பத்திரிக்கு...
அப்போது அவர் வீட்டில் இருந்தார். இதையடுத்து அவரை டாக்டர்களும், மருத்துவக்குழுவினரும் சமாதானம் செய்து வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மீண்டும் அரசு வென்லாக் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றி தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் சிந்து பி.ரூபேஷ் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியவர் அவருடைய வீட்டில் இருந்தார். அவரை மீட்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் மக்கள் யாரும் பீதி அடைய தேவையில்லை’’ என்று கூறினார்.