மணியாச்சி-தட்டப்பாறை இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி முடிந்தது ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

மணியாச்சி-தட்டப்பாறை இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி முடிந்தது. இதனால் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் டிராலியில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

Update: 2020-03-10 00:00 GMT
தூத்துக்குடி,

மதுரையில் இருந்து மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கும், மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கும் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இதில் கங்கைகொண்டான் முதல் மணியாச்சி வரையும், கடம்பூரில் இருந்து தட்டப்பாறை வரையிலான பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி தென்மாவட்டத்தில் முதலாவதாக மணியாச்சி முதல் தட்டப்பாறை வரையிலான இரட்டை ரெயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளன. இதனால் கடந்த நவம்பர் மாதம் ரெயில் என்ஜின் மட்டும் இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

ஆய்வு

தொடர்ந்து அந்த தண்டவாளத்தில் கண்டறியப்பட்ட சில குறைபாடுகள் களையப்பட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து மத்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர் கங்கைகொண்டானில் இருந்து மணியாச்சி வரை 14 கிலோ மீட்டர் தூரம், மணியாச்சியில் இருந்து கடம்பூர் வரை டிராலியில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அந்த வழித்தடத்தில் உள்ள ரெயில் நிலையங்கள், சிறிய, பெரிய பாலங்கள் மற்றும் தண்டவாளங்களின் அமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் தட்டப்பாறை முதல் மணியாச்சி வரையிலான ரெயில் தண்டவாளத்தை ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வு பணிகள் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. நாளை (புதன்கிழமை) மாலை 3 மணி அளவில் மணியாச்சி முதல் தட்டப்பாறை வரை அதிவேகத்தில் ரெயிலை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் வருகையொட்டி கங்ைககொண்டான் ரெயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு அழகாக காட்சி அளித்தது.

மேலும் செய்திகள்