அறந்தாங்கியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்ததாக 2 பேர் மீது வழக்கு

அறந்தாங்கியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-03-09 22:30 GMT
அறந்தாங்கி,

அறந்தாங்கி பெரியார் தெருவை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், அறந்தாங்கி எழில்நகரை சேர்ந்த மோகன் மகன் கார்த்திக், அதே பகுதியை சேர்ந்த அஜீத் ஆகியோர் அறந்தாங்கி பொற்குடையார் கோவில் சாலையில் நிதிநிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் நான் ரூ.20 லட்சம் செலுத்தி இருந்தேன். இந்நிலையில் கார்த்திக், அஜீத் ஆகியோர் எனக்கு பணத்தை திருப்பி தராமல் தலைமறைவாகி விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனக்கூறியிருந்தார்.

ரூ.1 கோடியே 66 ஆயிரம் மோசடி

இதேபோல அறந்தாங்கி தாரணி நகரை சேர்ந்த ஜெயபால் (வயது 43) மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், நான் நகைக்கடை நடத்தி வருகிறேன். அறந்தாங்கி எழில்நகரை சேர்ந்த மோகன் மகன் கார்த்திக், அதே பகுதியை சேர்ந்தவர் அஜீத் ஆகியோர் அறந்தாங்கி பொற்குடையார் கோவில் சாலையில் நிதிநிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் நான் ரூ.1 கோடியே 66 ஆயிரத்து 500-ஐ செலுத்தி இருந்தேன். இந்நிலையில் கார்த்திக், அஜீத் ஆகியோர் எனக்கு பணத்தை திருப்பிதராமல் தலைமறைவாகிவிட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனக்கூறியிருந்தார்.

2 பேர் மீது வழக்குப்பதிவு

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 2 மனுக்கள் மீது அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து அறந்தாங்கி போலீசார், கார்த்திக், அஜீத் ஆகியோர் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணிடம் பணம் அபேஸ்

திருமயம் வீரணாம்பட்டியை சேர்ந்த கருப்பையா மனைவி வசந்தா என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தார். அதில், நான் சம்பவத்தன்று பொன்னமராவதி அண்ணா சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.மில் அருகே இருந்தவரிடம் எனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்துத்தர கூறினேன். அவரும் எனது ஏ.டி.எம். கார்டை வாங்கி கொண்டு, இதில் பணம் இல்லை எனக்கூறி, மற்றொரு ஏ.டி.எம். கார்டை என்னிடம் கொடுத்துவிட்டார். பின்னர் அவர் மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் எனது கார்டை பயன்படுத்தி ரூ.40 ஆயிரத்தை எடுத்து உள்ளார். எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் எனக்கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தாவிடம் நூதன முறையில் பணம் அபேஸ் செய்தவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்