மதுரவாயலில் பயங்கரம் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை
மதுரவாயலில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
பூந்தமல்லி,
சென்னை மதுரவாயல் பலராமன் தெருவில் உள்ள ஒரு காலி இடத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் கொலையான வாலிபர், மதுரவாயல் ஆலப்பாக்கம், ராஜீவ்காந்தி நகர், பாரதியார் தெருவைச் சேர்ந்த முனுசாமி என்ற சாமி (வயது 32) என்பதும், அதே பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வந்ததும் தெரிந்தது.
நண்பர்களுக்குள் தகராறு
நேற்று முன்தினம் காலை முதல் முனுசாமி, அவரது 3 நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இரவு இந்த இடத்தில் மது அருந்தி விட்டு சாப்பிடும்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, அதில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள், முனுசாமியை அடித்து, உதைத்து நிர்வாணமாக்கியதுடன், அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமியை கொலை செய்த அவரது நண்பர்கள் யார்?. எதற்காக அவரை கொலை செய்தனர்?. முன் விரோதம் காரணமா?. அல்லது பெண் விவகாரமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
4 தனிப்படைகள் அமைப்பு
மேலும் அந்த பகுதியில் உள்ள மதுக்கடை உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க மதுரவாயல் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையாளிகள் சிக்கிய பிறகே கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.