புதிய பஸ் நிலைய கட்டிட பணிகள்; அமைச்சர் ஆய்வு

திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டிடப்பணிகளை அமைச்சர் பாஸ்கரன் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-03-09 22:00 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் காந்தி சிலை அருகே ரூ. 3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையத்திற்கான கட்டுமானப்பணிகள் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. சுமார் 90 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் கட்டுமானப் பணிகளை கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு செய்து பணி முடியும் காலம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் விரைவில் பணிகள் முடிக்கும்மாறு உத்தரவிட்டார்.

மேலும் பயணிகளுக்கு போதுமான நிழற்குடை இல்லாதது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, காலியாக உள்ள இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், பஸ் நிலையத்திற்குள் இருக்கும் மிகவும் பழமையான வேம்பு, அரசமரத்தை வெட்ட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் பணி நடைபெறும் இடங்களில் காலிமதுபாட்டில்கள் மற்றும் கழிவு நீர் சூழ்ந்து இருந்ததைக்கண்ட அமைச்சர் அதனை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று எச்சரித்தார்.

ஆய்வின் போது, கலெக்டர் ஜெயகாந்தன், அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவரும், பாம்கோ சேர்மனுமான ஏ.வி.நாகராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மூர்த்தி,அழகர்சாமி,கோட்டையிருப்பு கலைச்செல்வம்,புதுத்தெரு முருகேசன்,வக்கீல் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள்,ஆறுமுகம்,நாகராஜன்,நகரச் செயலாளர் இப்ராம்ஷா, வார்டு செயலாளர் என்.பி. சுப்பிரமணியன், உதவி பொறியாளர் அன்புச்செழியன், மேற்பார்வையாளர் சந்திரமோகன்,செயலர் அலுவலர் ராதாகிருஷ்ணன், தாசில்தார் ஜெயலெட்சுமி உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்