நெல் மூட்டைகளை எடை போட பணம் வசூல்: விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - இரவு வரை நீடித்ததால் பரபரப்பு
நெல் மூட்டைகள் எடை போட பணம் வசூலிப்பதை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 40 கிலோ எடை கொண்ட 1,000 மூட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் நெல் மூட்டைகள் எடை போடுபவர்கள் ஒரு கிலோவிற்கு 1 ரூபாயில் இருந்து 1 ரூபாய் 50 காசு வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் வேட்டவலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடை போடுபவர்கள் பணம் வசூலிப்பதாகவும், விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள திருவண்ணாமலை மண்டல நுகர்பொருள் வாணிப கழகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து அங்கேயே மதிய உணவு வாங்கி வந்து சாப்பிட்டனர்.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்ட போது, வேட்டவலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் எடை போட பணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதிகாரிகளிடம் கேட்ட போது, யார் பணம் வசூலிக்கின்றனர் என்று தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் நேற்று இரவு வரை தொடர்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.