அவலூர்பேட்டை-சேத்துபட்டு சாலையில் விவசாயிகள் சாலைமறியல்

அவலூர் பேட்டை-சேத்துப்பட்டு சாலையில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2020-03-09 22:15 GMT
மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த தானியங் களை கொண்டு வந்து விற்று பலனடைகிறார்கள். நேற்று காலையில் விவசாயிகள் வழக்கம் போல் நெல் உள்ளிட்ட தானியங்களை விற்பனை செய்வதற்காக ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

அங்கு எடை போடுபவர்களிடம் விளைபொருட்களை எடை போடுமாறு கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலியை ஒழங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகத்தினர் தரவில்லை. ஆகையால் எடை போட மாட்டோம் எனக் கூறியுள்ளனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த விவசாயிகள் திடீரென அவலூர்பேட்டை-சேத்துப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அவலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தனிப்பிரிவு ஏட்டு ராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் இப்பிரச்சினை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியவுடன் விவசாயிகள் அனைவரும் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்