வேலூர் சர்க்கரை ஆலையில் பாக்கியாக உள்ள ரூ.27 கோடி கரும்பு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை மனு
ரூ.27 கோடி கரும்பு நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராணிப்பேட்டையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 335 மனுக்களை பெற்றார். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தாரகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் ஒரு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் 2019-2020-ம் ஆண்டில் சர்க்கரை ஆலைக்கு மொத்தம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 846 டன் கரும்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி முடிய ரூ.5 கோடியே 50 ஆயிரம் விவசாயிகளுக்கு கொடுத்துள்ளனர். மீதமுள்ள தொகை ரூ.27 கோடியே 7 லட்சம் நிலுவையாக உள்ளது. இந்த தொகை கடந்த 3 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால் மறுபடியும் கரும்பு விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. ஊக்கத் தொகைகளும் நிலுவையாக உள்ளது. எனவே நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.
ஆற்காடு கஸ்பா தனபால் தெருவை சேர்ந்தவர்கள் கொடுத்துள்ள மனுவில் எங்கள் தெருவில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. செய்யாறு சாலையில் இருந்து தாலுகா மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்கள், கண் மருத்துவமனை ஆகியவற்றிற்கு செல்லும் பொதுமக்கள் இந்த தெரு வழியாகதான் சென்று வருகின்றனர். எனவே தெருவின் இருபுறங்களிலும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியை சேர்ந்த வசீகரன் என்பவர் கொடுத்த மனுவில், பிஞ்சியில் வடக்கு தெரு, நேருவீதி, நடுத்தெரு ஆகிய தெருக்களில் உள்ள ஆழ்துளைகிணறுகள் பழுதடைந்துள்ளன. கோடைகாலம் தொடங்க உள்ளதால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துக்கடை பஸ் நிலையத்தில் வாலாஜா, காஞ்சீபுரம் மார்க்கத்தில் செல்ல வேண்டிய பயணிகள் உட்கார இடமில்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே பஸ் நிலையத்தில் நடுவில் உள்ள தடுப்பு சுவரை அகற்றி பயணிகள் உட்காருவதற்கு மேடை அமைத்து தர வேண்டும் என கூறி உள்ளார்.
கூட்டத்தில், மின்சாரம் தாக்கி பலியானவரின் குடும்பத்தினருக்கு, முதல்- அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்.