ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள உடற்பயிற்சி மையத்துக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள்
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள உடற்பயிற்சி மையத்துக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு,
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உடற்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பொதுமக்கள் சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார்கள். இந்த மையத்துக்கு நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்கப்பட்டு உள்ளன.
இந்த உடற்பயிற்சி உபகரணங்களை உடற்பயிற்சி மையத்துக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு உடற்பயிற்சி மையத்துக்கு நவீன உடற்பயிற்சி உபகரணங்களை வழங்கினார்கள்.
இதில் முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், நடைபயிற்சியாளர்கள் நலம் நாடும் சங்க தலைவர் பாரதி முருகேசன், செயலாளர் செந்தில் மற்றும் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.