ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்களிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்களிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-08 23:45 GMT
புதுச்சேரி,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஜெய்நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 49). தனியார் கம்பெனி ஊழியர். இவர் கடந்த சில நாட்களாக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினர் முருகனுக்கு உதவியாக இருந்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு கிருஷ்ணன் ஜிப்மர் ஆஸ்பத்திரி கேண்டீன் அருகில் உள்ள கொட்டகையில் படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் கண்விழித்து பார்த்த போது தனது சட்டை பையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

வாலிபர் கைது

அதன்பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஜிப்மர் ஆஸ்பத்திரி கேண்டீன் அருகே சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சங்கராபுரத்தை சேர்ந்த முகமது இர்பான் (26) என்பதும், கிருஷ்ணனின் செல்போனை திருடியதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் இரவில் அயர்ந்து தூங்கும்போது, அவர்களிடம் இருந்து செல்போன்களை முகமது இர்பான் திருடியதும் தெரியவந்தது.

செல்போன்கள் பறிமுதல்

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்