குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன மாநாடு - திருமாவளவன் பங்கேற்பு
த.மு.மு.க. சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ராமநாதபுரத்தில் கண்டன மாநாடு நடைபெற்றது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் கேணிக்கரை அருகே த.மு.மு.க. சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு த.மு.மு.க. மேற்கு மாவட்ட தலைவர் முகமது இக்பால் தலைமை தாங்கினார். த.மு.மு.க. கிழக்கு மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் வரவேற்றார். மாநாட்டில் ராமநாதபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ், விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, மதுரை எம்.பி. வெங்கடேசன், த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் ஹாஜாகனி, மூத்த நிர்வாகி குன்னங்குடி ஹனீபா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, முஸ்லிம் ஐக்கிய ஜமாத் செயலாளர் ஜெய்னுல் ஆலம், மாவட்ட உலமாக்கள் சபை தலைவர் அகமது இப்ராஹிம், த.மு.மு.க. மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா, ம.ம.க. மாநில அமைப்பு செயலாளர் உசேன் கனி, த.மு.மு.க மாநில துணைச் செயலாளர் ஹலிம், ராமநாதபுரம் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் முக்தீஸ்வரன், கீழக்கரை ஹசன், ம.ம.க. மாநில மீனவரணி செயலாளர் செரீப் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் பேசும் போது, நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற மத்திய அரசின் தோல்வியை மறைத்து குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும் வெறுப்பு அரசியலை மக்கள் மத்தியில் திணித்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பேசினர்.
கூட்டத்தில் கண்டன மாநாட்டிற்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த த.மு.மு.க. மாநில செயலாளர் சலிமுல்லாகானின் பணியை கூட்டத்தில் கலந்து கொண்ட த.மு.மு.க. மாநில செயலாளர் ஜவாஹிருல்லாஹ், மாநில பொதுச் செயலாளர் ஹாஜா கனி ஆகியோர் பாராட்டினர். மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அதிக அளவில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநாடு ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மாநில நிர்வாகிகளுடன் இணைந்து செய்திருந்தனர். விழா முடிவில் ராமநாதபுரம் நகர் த.மு.மு.க. தலைவர் அப்துர் ரஹிம் நன்றி கூறினார்.