ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு முத்தையாபுரத்தில் மாட்டுவண்டி பந்தயம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு முத்தையாபுரத்தில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
ஸ்பிக்நகர்,
ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு முத்தையாபுரத்தில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
மாட்டுவண்டி பந்தயம்
தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இந்த போட்டிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
பெரியமாட்டு வண்டி பந்தயம் 10 மைல் தூரத்துக்கும், சின்ன மாட்டுவண்டி பந்தயம் 6 மைல் தூரத்துக்கும் நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டன. இறுதியாக போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒருவர் காயம்
போட்டியை காண சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் திரண்டனர். அப்போது போட்டியை காண வந்த முத்தையாபுரத்தை சேர்ந்த பால்ராஜ் (வயது 60) என்பவர் மீது மாட்டு வண்டி மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த பால்ராஜ் உடனடியாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் சின்னப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.