கணினி மயமான போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் புகார் மனுவை இணையதளத்தில் அனுப்பும் வசதி

திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கணினி மயமாக்கப்பட்டதால், பொதுமக்களின் புகார் மனுவை இணையதளத்தில் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பும் வசதி விரைவில் அமல்படுத்தப்படுகிறது.

Update: 2020-03-07 23:25 GMT
திண்டுக்கல், 

தமிழ்நாடு அரசில் அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு துறையின் அலுவலகங்களும் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு உள்ளன. இதனால் அரசு துறைகளின் அனைத்து சேவைகளையும் இணையதளத்தின் மூலம் பெற்று விடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் போலீஸ் துறையை பொறுத்தவரை தனி இணையதளம் உள்ளது. அதன்மூலம் மக்கள் வீட்டில் இருந்தபடியே புகார் செய்யலாம்.

அந்த புகார்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இணையதளம் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது. போலீஸ் இணையதளத்தில் முதல் தகவல் அறிக்கையை பார்வையிடலாம், விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக முதல் தகவல் அறிக்கை உள்பட வழக்குகளின் ஆவணங்கள் போலீஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

கணினி மயம்

அதேநேரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் துறைரீதியான பெரும்பாலான நடைமுறைகளுக்கு இணையதள சேவையை பயன்படுத்தப்படாமல் இருந்தது. மேலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள், போலீசார் மூலம் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். இதனால் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இதை தவிர்க்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அனைத்து செயல்பாடுகளையும் கணினி மயமாக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், கணினி மயமாக்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனைத்து செயல்பாடுகளும் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன.

பொதுமக்களின் புகார் மனுக்கள்

இதனால் வழக்கமான பதிவேடுகளை தவிர்த்து அனைத்து விவரங்களும் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் போலீஸ் நிலையங்கள், துணை சூப்பிரண்டு அலுவலகங்களுக்கு தகவல், குறிப்பாணை உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் அனைத்தும் இணையதளம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களையும் ஸ்கேன் செய்து இணையதளம் வழியாக போலீஸ் நிலையத்துக்கு அனுப்பும் நடவடிக்கை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

மேலும் செய்திகள்