குடிமங்கலம் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

குடிமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை கைது செய்தனர்.

Update: 2020-03-07 22:36 GMT
குடிமங்கலம்,

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக குடிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் குடிமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் குடிமங்கலம் அருகே உள்ள கோட்டமங்கலத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்த முருகன் என்பவரது மகன் தினேஷ்பாபு (வயது 20) மேலும் அதே மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் பலராமன் (20) ஆகியோர் கோட்டமங்கலம் பகுதியில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த குடிமங்கலம் போலீசார் அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ரூ.4ஆயிரத்து 50 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இருவரும் தேனிமாவட்டத்தில் இருந்து பழனி வழியாக பஸ்சில் கோட்டமங்கலத்திற்கு கஞ்சாவை மொத்தமாக கொண்டு வந்து சிறிய பொட்டலங்களாக போட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்