கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை: அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு வார்டுகள் தயார் கலெக்டர் தகவல்

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-03-07 23:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, இத்தாலி, ஈரான், ஜப்பான், தென்கொரியா, நேபால், இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் 28 நாட்களுக்கு வெளி நடமாட்டத்தை முற்றிலுமாக தவிர்த்து வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். மேலும் காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

சமீபத்தில் சீனாவில் ஏற்பட்டு உள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்றால் நாமக்கல் மாவட்டத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவில் இருந்து விமானம் மற்றும் கப்பல் மூலம் வரும் பயணிகள் அனைவரும் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பரிசோதிக்கப்படுகின்றனர். அவர்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

அச்சப்பட தேவையில்லை

மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்காக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. எனினும் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்த கூடிய ஒரு வகை வைரஸ் கிருமியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

கைகழுவும் இடம்

கூட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் கண்டவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் பரவுவதால் இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முறைகள் பற்றியும் கிருமி நாசினி தெளித்தல் மற்றும் கைகழுவும் முறைகள் பற்றியும் விரிவான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் கை கழுவுவதற்கு ஏற்ப கிருமி நாசினியுடன் கூடிய கைகழுவும் இடம் ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் டாக்டர் மணி, மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சோமசுந்தரம், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) சாந்தி மற்றும் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்