இடஒதுக்கீட்டை பாதுகாக்க நிரந்தர சட்டம் இயற்றக்கோரி ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் பங்கேற்பு

இடஒதுக்கீட்டை பாதுகாக்க நிரந்தர சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-03-07 22:30 GMT
சென்னை, 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவை சார்பில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க நிரந்தர சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவை தலைவர் மலைச்சாமி தலைமை தாங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன பேருரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவை பொதுச்செயலாளர் பாவாணன், நிதி செயலாளர் புதியவன், தலைமை நிலைய செயலாளர் தமிழ்குமரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த மண்ணில் சாதி, வர்ணத்தின் பெயரால் குறிப்பிட்ட சில சமூகத்தினரே அதிகாரம் செய்து வந்தனர். இந்த நிலைமையை மாற்றி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியல் இன மக்களையும் அதிகாரத்தில் இடம் பெறச்செய்தது இடஒதுக்கீட்டு முறையாகும். அதற்கு காரணம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம்.

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சனாதன சக்திகள், அம்பேத்கர் இயற்றிய அரசியல் அமைப்பு சட்டத்தையே தகர்க்க நினைக்கின்றனர். சானாதனம்தான் கொரோனா வைரசைவிட மிகக் கொடியது.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்ல பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிரானதுதான். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்