கஞ்சா கடத்தி வந்த புதுச்சேரி வாலிபர்கள் கைது; மோட்டார் சைக்கிள் பறிமுதல்
கஞ்சாவை பொட்டலங்களாக போட்டு விற்பதற்காக கடத்தி வந்த புதுச்சேரி வாலிபர்கள் 2 பேரை வேட்டவலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேட்டவலம்,
வேட்டவலம் பஸ் நிலையம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவண்ணாமலை பகுதியிலிருந்து 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் விழுப்புரம் நோக்கி செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் வேகமாக செல்ல முயன்றனர். சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார்சைக்கிளை மறித்து நிறுத்தினர்.
அவர்களிடம் சோதனையிட்டபோது சிறிய பொட்டலங்கள் காணப்பட்டன. அதனை எடுத்து பார்த்தபோது கஞ்சா இருந்தது. அனைத்து பொட்டலங்களிலும் 50 கிராம் கஞ்சாவை வைத்து அவற்றை விற்பனைக்காக கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் புதுச்சேரியை சேர்ந்த நந்தகுமார் (வயது 21), பிரபு (21) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் கஞ்சா பொட்டலங்களுடன் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
வேட்டவலத்தில் சமீப காலமாக 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட நடுத்தர இளைஞர்களிடையே அதிக கஞ்சா பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட இடங்களில் இந்த பொட்டலங்களை மொத்தமாக கொடுத்து அதனை சிலர் விற்பதாகவும் கூறப்படுகிறது. எனவே அது போன்ற ஏஜெண்டுகளிடம் கஞ்சாவை இவர்கள் வாங்கி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.