கர்நாடக அரசின் நிதிநிலைக்கு ஏற்ற பட்ஜெட் மந்திரி பைரதி பசவராஜ் பேட்டி
கர்நாடக அரசின் நிதிநிலைக்கு ஏற்ற பட்ஜெட்டை எடியூரப்பா தாக்கல் செய்துள்ளார் என்று நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ் கூறினார்.
பெலகாவி,
கர்நாடக நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அரசியல் செய்கிறார்
எங்கள் பா.ஜனதா அரசை தரித்திர அரசு என்று சித்த ராமையா குறை கூறியுள்ளார். அவரும் பல முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர். உண்மை நிலை என்ன என்று அவருக்கு தெரியும். மாநில அரசின் நிதிநிலைக்கு ஏற்ற பட்ஜெட்டை எடியூரப்பா தாக்கல் செய்துள்ளார். சித்தராமையா தனது தொகுதிக்கு அதிக நிதி ஒதுக்கீடு கிடைத்திருப்பதை சொல்ல மாட்டார்.
அவர் எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்கிறார். நிலைமையை புரிந்து கொண்டு பேச வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக என்ன சொல்ல வேண்டுமோ? அதை அவர் கூறுகிறார். எடியூரப்பா மிக சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். எடியூரப்பா ஆட்சிக்கு வந்த பிறகு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இன்னொரு புறம் கடும் வறட்சி உண்டாகியுள்ளது. பிரச்சினைகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஒரே நாளில் தீர்வு காண முடியாது.
ரகசிய ஒப்பந்தம்
சித்தராமையா, மாநில அரசை குறை கூறாமல் இருந்தால், அவரும், எடியூரப்பாவும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகும். அதனால் அவர் மாநில அரசை விமர்சிக்கிறார். அவரது விமர்சனத்திற்கு எடியூரப்பா தக்க பதில் அளிப்பார். பட்ஜெட்டில் பாதாமிக்கு ரூ.630 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். பட்ஜெட்டுக்கு முன்பே எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம் எழுதினார். அதன்படி அவரது தொகுதிக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு மந்திரி பைரதி பசவராஜ் கூறினார்.