திருவொற்றியூரில் மரக்கடையில் தீ விபத்து ரூ.25 லட்சம் பொருட்கள் நாசம்
திருவொற்றியூரில் மரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் இந்திராகாந்தி நகர் மெயின் ரோட்டில் ஜான்சன் (வயது 33) என்பவருக்கு சொந்தமான மரக்கடை உள்ளது. இந்த கடையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து கொண்டது. அப்போது காற்று பலமாக வீசவே தீ கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துகொண்டது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
3 மணி நேரம் போராடி அணைத்தனர்
உடனடியாக வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, மணலி, தங்கசாலை ஆகிய பகுதிகளில் இருந்து 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் தீர்ந்துபோனதால் 6 குடிநீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்தில் குடோனில் இருந்த மினி லாரி மற்றும் மரத்தை அறுக்க பயன்படுத்தப்படும் எந்திரங்கள், மரச்சாமான்கள் என ரூ.25 லட்சத்துக்கும் அதிகமான பொருட் கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ விபத்து காரணமாக கரிமேடு-பேசின் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மற்றொரு சம்பவம்
அதேபோல் ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை, ஜெயராம் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (வயது 50). இவர், தனது வீட்டுக்கு முன்புறம் மரக்கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மரக்கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி, பூந்தமல்லி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் கடையில் இருந்த மரம் அறுக்கும் எந்திரங்கள், மரப்பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி பட்டாபிராம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.